Thursday, April 9, 2009

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6

உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

“நபி (ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்’ என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார். ஆதாரம் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் இரவில் செய்த பிரார்த்தனை!

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

ஸாபித் இப்னு முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, ‘நீ உண்மை; உன் சொல் உண்மை’ என்றார்கள். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தின் கருவூலம்!

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லி வந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். பிறகு நான் என் மனத்திற்குள் ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலம்டவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு கையேஸ! ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, ‘சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்றோ, ‘அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?’ என்றோ சொன்னார்கள். ஆதாரம் : புகாரி

நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறை: -

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அறிவித்தார் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக்
கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!’ என்று பிரார்த்திக்கட்டும். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தில் நுழைய ஆசையா?

“நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது - நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

தூங்குவதற்கு முன்…

“நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

இறைவனுக்கு மிக நெருக்கமானவராக வேண்டுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

தஜ்ஜாலின் அடையாளங்கள்: -

“இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃ’பிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு!

உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

தும்மினால் கூறவேண்டியவைகள்!

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) கட்டளையிட்ட ஏழு விஷயங்கள்: -

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.
4. நலிந்தவருக்கு உதவுவது.
5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது
6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.
2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

(ஆதாரம் : புகாரி)
பாவம் எனும் வேலியைச் சுற்றி மேயாதீர்கள்!

“ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :நுஃமான் இப்னு பஷீர்(ரலி), ஆதாரம் : புகாரி.

குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான அத்தியாயம்!

“ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (’நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி), ஆதாரம் : புகாரி.

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்!

“மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி.

இறைவனைப் பார்த்ததாகவும் மறைவான விஷயங்கள் தமக்குத் தெரியும் என்றும் கூறுபவர் பொய்யரே!

ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

நீங்கள் படுக்கைக்குச் சென்றால்…

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி), ஆதாரம் : புகாரி.

தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் போது…

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4

மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்!

“(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதே!

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள் : “நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் ‘மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்று பதிலளித்தார்கள். ஆதாரம் : புகாரி.

அண்ணலார் (ஸல்) அவர்களின் மன்னிக்கும் பெருந்தன்மை!

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தாலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்களின் நளினம்!

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் : “ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் காட்டிய பரிவு!

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் : “நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பகுதி உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்று கூடக் கேட்பார்கள். ஆதாரம் : புகாரி.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் : “நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்” ஆதாரம் : புகாரி.

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்: -

“இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

விருந்துபசாரம் மூன்று நாட்களாகும்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும். (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்: -

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்றார்கள்.” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3

சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் யார்?

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வீன் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்களின் கனிவு: -

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், ‘முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

உண்மை சொர்க்கத்திற்கும் பொய் நரகத்திற்கும் வழிவகுக்கும்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்.
(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

நயவஞ்சகனின் மூன்று அடையாளங்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில் மோசடி செய்வான்) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பொய்பேசுபவர்களுக்கான தண்டணைகள்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு
விளக்கமளிக்கையில்) ‘தாடை சிதைக்கப்பட்ட நிலையில், நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். எனவே, ழூழூ(நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை
அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஒரு முஃமினை காஃபிர் என்று ஏசுவது கூடாது: -

‘ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒரவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்!பெற்றோர் அல்லது பிள்ளைகளின் மீது சத்தியம் செய்யக் கூடாது!

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளிவாசலில்) அமைத்துக் கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித்தோழர்களில்) சிலரும் வந்து
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களின் குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர்.
(நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களின் வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, ‘(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செய்ல தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (எனவேதான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்’ என்றார்கள். அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம் : புகாரி.

உண்மையான வீரன் யார்?

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்: -

நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். ‘நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள்
பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்’ என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்’ என்றார்கள். அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2

எல்லா நற்செயல்களும் தர்மமே!

‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்!

‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு
கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன
செய்வது?)’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று
கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்
தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), ஆதாரம் : புகாரி.

பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள்:-

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள். பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
அறிவிப்பவர் :அதீ இப்னு ஹாத்திம் (ரலி), ஆதாரம் : புகாரி.

உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே: -

முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, ‘அவர்கள்
இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் :மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! சாபமிடாதீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

இறுதி காலத்தின் அடையாளங்களில் சில!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று
கூறினார்கள். மக்கள், ‘ஹர்ஜ் என்றால் என்ன?’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை கொலை’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளரை மதித்த உயர்ந்த பண்பாளர்: -

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை. அறிவிப்பவர் :அனஸ்(ரலி, ஆதாரம் : புகாரி.

வீட்டு வேலைகளை செய்த அண்ணலார் அவர்கள்!

‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள்.
தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

முழுமையான ஈமானை எப்போது அடைய முடியும்?

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும்
அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. 3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராக வது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிமை ஏசுவது பாவமாகும்!

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

திட்டியவரிடமே திரும்பிச் செல்லும் சாபம்!

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளர்களை மதிக்கும் பண்பாளர்களாகுங்கள்: -

“…. ‘(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். எனவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம்
சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : மஅரூர் இப்னு சுவைத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கோள் சொல்லித் திரிபவருக்கான தண்டனை: -

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது ‘(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி
(புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நாட்டார்கள். பிறகு, ‘இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின்
வேதனை குறைக்கப்படலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

நோன்பின் பலனை நீக்குபவைகள்: -

பொய்யான பேச்சைiயும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களிலேயே மிகவும் மோசமானவர்: -

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களை அளவு கடந்து புகழாதீர்கள்: -

ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!’ என்று பல
முறை கூறினார்கள். பிறகு, ‘உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு
இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்.
காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘(நபி (ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி),
ஆதாரம் : புகாரி.

பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்: -

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேம்ப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

செய்த பாவங்களை வெளியில் பகிரங்கப்படுத்தாதீர்கள்: -

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பம்ரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பம்ரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். அறிவிப்பவர் :வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

தாயின் மகிமை: -

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?

‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!

“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), ஆதாரம் : புகாரி.

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: -

(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார். அறிவிப்பவர் :அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறித்தால்?

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?

நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன். ‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!

‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி.

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -

“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!

‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.